السبت، 29 أبريل 2017

அப்பா

அப்பா....

காலையில் இரண்டரை  மணிக்கு போன் அடிக்கிறது என்றால் அப்பாவுடையது என்று அர்த்தம். அவருக்கு காலை  ஐந்து மணி என்றால் தோஹாவில் காலை இரண்டரை மணி. வந்த புதிதில் அப்பாவிடம் சொல்லிப் பார்த்தேன். அவருக்கு இந்த கிரீன்விச் MEANTIME  இல் எல்லாம் நம்பிக்கை இல்லை. 'என்னடா இன்னம் தூங்கறாய்' என்பார். அவரை பொறுத்தவரை எல்லா ஜீவா ராசிகளும் காலை 5 மணிக்கு எந்திரிந்து அண்டாவில் வெந்நீர் போட வேண்டும் என்று எதிர்பார்ப்பு.
அப்பா வேகமாக பேசுவார். அவருக்கு அது தெரிந்ததாலோ என்னமோ எல்லாத்தையும் மூணு தடவை சொல்லுவார். அப்பாவின் நண்பர் மிக மரியாதையானவர். அப்பாவை பார்க்க வந்திருந்தார். அப்பா அவரிடம் 'அப்பிந்தச்சா' என்று மூணு தடவை கேட்டார்  [அப்பவே வந்து விட்டீர்களா என்பது தமிழாக்கம்]. நண்பர் மரியாதை நிமித்தமாக திரும்ப கேட்க விரும்பவில்லை. எனவே
 'அப்பளம் நேத்திக்கிதான் வாங்கினேன். சிவக்காம நன்னா பொரியறது' என்று ஒரு போடு போட்டார்.
காலையில் போனில் 'ஆயன் கிணத்தில் ரவை கொண்டு போன வண்டி மறிஞ்சு விட்டது, எல்லாரும் ரவையை கொண்டு போயிட்டா, ரங்கா மாமி மூக்குத்தியை காணலை , முருகன்  நாளைக்கி பைல்ஸ்   ஆப்பரேஷன் பண்ணிக்கறான், ரமேஷ் ஆத்தில பசு கன்னு போட்டாச்சு' என்று தகவல்களை அடுக்குவார். இதை காலை ரெண்டரை மணிக்கு தோஹால  நான் கேட்டு என்ன செய்ய போரேன் என்பது அவர்  கவலை அல்ல.
அப்பா அது தவிர பல தகவல்களை கேப்பார். இடை இடையே 'தூங்கரையடா'  என்பார். உனக்கு எவ்வளவு  செலவு ஆகிறது என்பார். நான் அவருக்கு ஆறாயிரம் செலவாகிறது என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். எனவே 'பன்னெண்டு ஆயிரம் ஆரதுப்பா' என்று பொய் சொல்வேன். 'ஏண்டா, நாங்க ரெண்டு பேர். நீங்க மூணு பேர். ஏன் அவ்வளவு ஆறது?' என்பார். அவருக்கு உலக பொருளாதாரத்தில்
நம்பிக்கை இல்லை-எனவே தோஹா புலியூர்குறிச்சி ஒரேவிலை வாசியில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பார்.
அப்பாவுக்கு மூன்று விஷயங்கள் அலர்ஜி. போர்ட்டர், ஹோட்டல், சினிமா. அவர் மட்டும் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் இந்த மூன்றையும்  உபயோகிக்கிறவர்களை 'வன் கொடுமை' சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளி இருப்பார்.
அப்பா எப்போதும் டவுன் பஸ்ஸில் கூட்டிகொன்டு போவார் [2009 வரை]. பல விஷயங்களை சொல்லி கொண்டு வருவார். அவர் வாழ்க்கையில் கஷ்டப்பட்டது, அம்மாவை அவர் இப்போது எப்படி பார்த்து கொள்கிறார் [அவருக்கு நான் அம்மாவை சரியாக பார்த்துக்கொள்வதில்லை என்று நினைப்பதாக ஒரு கருத்து]. சில சமயம் அம்மாவை புகழ்வார் [என்னை மகிழ்ச்சியாக்க]. 'உனக்கு டவுன் பஸ் பிடிக்காதோ' என்று கேட்பார், எதோ  நான் சிறு வயது முதல் AC காரில் தான் போன மாதிரி. சீட் கிடைத்ததும் என்னை உக்கார சொல்லி தான் நின்று கொண்டு வருவார். உக்கார சொன்னால் கோபபடுவார்.
சில சமயம் எனக்கு வரவு செலவு கணக்கெல்லாம் காட்டுவார். எதுக்கப்பா
 என்றால் சும்மா தாண்டா, நாளைக்கி உனக்கு ஈஸியா இருக்கும் என்பார்.
ஒரு தடவை போஸ்ட் மேன் மேல் பெட்டிஷன் போட்டேன் என்றார். அவன் ரொம்ப டிலே பன்றான் என்றார். எப்படிப்பா தெரியும்னா, நானே எனக்கு நாகர்கோவில்ல போயி லெட்டர் போட்டேன். அங்க டெஸ்பாட்ச் பண்ணி ஆச்சு. இவன் தான் ஹோல்டு பண்ணறான் என்று விளக்கமளித்தார். அப்பா ஒரு வில்லங்கமான ஆள்.
ஒரு தடவை அப்பாவும் அம்மாவும் பயங்கர சண்டை. என்னன்னு பார்த்த அம்மா ட்ரமுக்கு [drum) உள்ள எதோ குனிந்து பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறாள். எதேச்சையாக அங்கு வந்த அப்பா அவள் தலைக்கு மேல் தன் தலையை வைத்துப் பார்க்க, அது தெரியாத அம்மா சடாரென நிமிர, அப்பாக்கு சரியான அடி மூக்கிலே. அம்மாக்கு பின் மண்டையில. கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தினேன்.
அப்பாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். ஒரு தடவை காலையில் ரெண்டரை மணிக்கை போன் அடித்தது. பழக்க தோஷத்தில் 'சொல்லுங்கப்பா' என்றேன் தூக்க கலக்கத்தில். அங்க இருந்து 'என்னப்பா இது புது ஸ்டைல் , என்றான் என் மகன். அப்போது அப்பாவின் கால் இனிமே வரவே வராதே என்று மனம் ரொம்ப வலித்தது.
அப்பா வாழ்க்கையில்  நிறைய கஷ்டம் தான் பட்டு இருக்கிறார். தன் தந்தை அன்பை அனுபவித்தது இல்லை. நான் எவ்வளவோ சொல்லியும் வாழ்க்கையின் சுகங்களை அனுபவிக்க மறுத்துவிட்ட மாமனிதர்.
Physical closeness  விரும்பாத மனிதர். 2004ல் ஒரு நாள் அவரை கட்டி பிடித்து  கொண்டு விட்டேன். என்னடா என்று surprise  ஆகி விட்டாலும் என் மகன் 'அப்பா உங்களை கட்டிக்கணும்
  நினைக்கிறார் தாத்தா' என்றதும் ஓகே சொன்னார்.  அதற்கு அப்புறம் அடிக்கடி அப்பாவை அணைத்து கொள்வேன். நீங்கள்  ரொம்ப precious  அப்பா என்பேன். போறும்டா என்பார்.
அடுத்த பிறவியில் என் மகனாக பிறந்து, தந்தை அன்பை அனுபவிக்கவும், வாழ்க்கையை அனுபவிக்கவும், இன்னும் சற்று க்ளோஸ் ஆக பழகவும், சற்று தாராளமா செலவழிக்கவும் , வாய்ப்பு கொடு இறைவா என்று கண்கள் பனிக்க அந்த சர்வேஸ்வரனை வேண்டி கொள்கிறேன். அப்பாவை நினைக்கும் போதேல்லாம் ஒரு தாய்மை உணர்வு என்னில் மட்டற்று சுரக்கிறது.
 என் மகனை அணைத்துக்கொள்ளும் போதெல்லாம் நான் சற்று நினைவு இழந்தால்  'என்ன தாத்தா நினைப்பா' என்று கேட்பான்.
அப்பாவின் மறைவு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஒரு நல்ல தந்தையை தந்த இறைவனுக்கு என் நன்றி.

ليست هناك تعليقات:

إرسال تعليق