1990ல் நான் ஸ்பிக் நிறுவனத்தில் பணியாற்றிய போது மஞ்சள்காமாலை வந்து விட்டது.அம்மா 'எங்கேர்ந்துடா இந்த சுக கேடெல்லாம் கொண்டுவராய்' என,று புலம்பிவிட்டு பத்திய சாப்பாடு தந்தாள்.அப்பா 'மிலிட்டரி ஓட்டல்ல சாப்டா இப்படி எல்லாம் தான் வரும்' என்று 'தீர்ப்பு' கூறிவிட்டு அவருக்கு தெரிந்து மஞ்சள்காமாலை மூலம் 'சிவலோக ப்ரார்த்தி' அடைந்தவர்கள் பட்டியலையும் தந்தார். கூடவே 'நீ பயப்படாதே, பத்தியத்துக்கு வேண்டி சொன்னேன் ' ன்னார்.
அம்மா புலம்பி தீர்த்து விட்டாள்.'இவனுக்கு இரண்டு தடவை டைபாய்டு வந்தது.எவ கண்ணப்போட்டாளோ, அவ கண்ல கொள்ளிய வைக்க' என்று ஆள்தெரியாத எதிரியை திட்டிக்கொண்டு இருந்தாள். அப்பா 'நமக்கெல்லாம் நார்மல் சாப்பாடு தானேல்லியோ' என்று கேட்டார். அவர் 'கவலை' அவருக்கு.
அண்ணன் ஆனந்தன் என்னை தக்கலை குத்தால தாசிடம் கூட்டி கொண்டு போனான்
நல்ல சரீரம். அவர்முணுமுணுத்த பாட்டின் மூலம் 'சாரீரம்'சரியில்லை என்று கண்டு கொண்டேன்.
எல்லாம் கேட்டுவிட்டு 'மஞ்சக்காமாலைன்னு ஆராக்கும் சொன்னது' ன்னாரு. 'சார் நான் தூத்துக்குடில்ல' என்று பேசும் போது இடை மறித்து 'பாண்டில சரியா பாக்கமாட்டானுவ' .கிட்ட வந்து கண்களை சோதிச்சாரு- காலையில் பூரிமசாலா சாப்பிட்டிருந்தார் என்று ஊகிக்க முடிந்தது.தனது விரல்களால் வயிற்றில் jab பண்ணிக கொண்டே 'கும்பி நோவிருக்கா'. எனக்கு நாஞ்சில் தமிழ் புரியாததால் ஆனந்தனை பார்த்தேன்.'வலிக்கறதா சொல்லுடா' என்றான் கண்களில் கவலையோடு.
'நீங்க தக்கல்ல ஒரு டெஸ்ட் எடுத்துக்கிடுங்க,என்ன.சாஎங்காலம் வந்து பாருங்க.பத்து ரூவா குடுங்க' ன்னு சொல்லிட்டு 'டேய் தாசு, மத்தவன் இன்னிக்கி சுயீந்தரம் போறானாம் கேட்டியா' என்று தன் வழக்கமான பணிகளை பார்க்கப்போய்விட்டார்
சாயங்காலம் போனால் அதே வயிறு அமுக்கல் டெஸ்ட், பூரிமசாலாவை வெங்காய பஜ்ஜி இடமாற்றம் செய்திருந்தது.'ஒங்களுக்கு மஞ்சநோவு இருக்கு, மருந்து எளுதிருக்கேன்.ஒரு வாரம்களிச்சு வந்து பாருங்க, என்ன' என்று அனுப்பி வைத்தார்
ஒரு வாரம் கழித்து போனால் அதே ரத்த பரிசோதனை. குத்தால தாஸ் என்னையும் அந்த பேப்பரையும் மாறி மாறி பார்த்தார்.
'ஒங்களுக்கு மஞ்சநோவாக்கும் வந்திருக்கு.மருந்து சாப்பிட்டாச்சின்னாக்கும் சொன்னீய. இப்பம் டெஸ்ட் எடுத்ததில செரியாகல்ல.நான் இனி என்னெய்யதுக்கு' என்றார்
ஆனந்தனுக்கு கண்களில் நீர்முட்டியது. எனக்கு பயங்கர பசி.
ஆனந்தன் 'கவலைப்படாதேடா, நாகர்கோவில்ல கண்ணன் லேப்ல போய் செக் பண்ணுவோம், இவரு முழியே சரியில்ல' ன்னான்
அங்க டெஸ்ட் பண்ணி பார்த்ததில் all OK சொல்லிவிட்டார்கள். ஆனந்தன் என்னை கட்டி பிடித்து கொண்டு 'நான் சொன்னேனே பாத்தியாடா, பத்தியத்த விட்டு தள்ளு, ஓட்டல்ல போய் நன்னா சாப்டுட்டு ஆத்துக்கு போவோம்'னான்
அன்றோடு நான் தாஸுக்கு 'பை' சொல்லிவிட்டேன்
ஆனந்தன் போல அன்பான அண்ணனை தந்த அந்த இறைவனுக்கு என் நன்றி
டாக்டர் தாஸை அறிந்தவர்கள் வருத்த பட வேண்டாம் .அவர் மீது எனக்கு மிகுந்த அபிமானமுண்டு