السبت، 29 أبريل 2017

Dr தாஸ்


1990ல் நான் ஸ்பிக் நிறுவனத்தில் பணியாற்றிய போது மஞ்சள்காமாலை வந்து விட்டது.அம்மா 'எங்கேர்ந்துடா இந்த சுக கேடெல்லாம் கொண்டுவராய்' என,று புலம்பிவிட்டு பத்திய சாப்பாடு தந்தாள்.அப்பா 'மிலிட்டரி ஓட்டல்ல சாப்டா இப்படி எல்லாம் தான் வரும்' என்று 'தீர்ப்பு' கூறிவிட்டு அவருக்கு தெரிந்து மஞ்சள்காமாலை மூலம் 'சிவலோக ப்ரார்த்தி' அடைந்தவர்கள் பட்டியலையும் தந்தார். கூடவே 'நீ பயப்படாதே, பத்தியத்துக்கு வேண்டி சொன்னேன் ' ன்னார்.
அம்மா புலம்பி தீர்த்து விட்டாள்.'இவனுக்கு இரண்டு தடவை டைபாய்டு வந்தது.எவ கண்ணப்போட்டாளோ, அவ கண்ல கொள்ளிய வைக்க' என்று ஆள்தெரியாத எதிரியை திட்டிக்கொண்டு இருந்தாள். அப்பா 'நமக்கெல்லாம் நார்மல் சாப்பாடு தானேல்லியோ' என்று கேட்டார். அவர் 'கவலை' அவருக்கு.
அண்ணன் ஆனந்தன் என்னை தக்கலை குத்தால தாசிடம் கூட்டி கொண்டு போனான்
நல்ல சரீரம். அவர்முணுமுணுத்த பாட்டின் மூலம் 'சாரீரம்'சரியில்லை என்று கண்டு கொண்டேன்.
எல்லாம் கேட்டுவிட்டு 'மஞ்சக்காமாலைன்னு ஆராக்கும் சொன்னது' ன்னாரு. 'சார் நான் தூத்துக்குடில்ல' என்று பேசும் போது இடை மறித்து 'பாண்டில சரியா பாக்கமாட்டானுவ' .கிட்ட வந்து கண்களை சோதிச்சாரு- காலையில் பூரிமசாலா சாப்பிட்டிருந்தார் என்று ஊகிக்க முடிந்தது.தனது விரல்களால்  வயிற்றில் jab பண்ணிக கொண்டே 'கும்பி நோவிருக்கா'. எனக்கு நாஞ்சில் தமிழ் புரியாததால் ஆனந்தனை பார்த்தேன்.'வலிக்கறதா சொல்லுடா' என்றான் கண்களில் கவலையோடு.
'நீங்க தக்கல்ல ஒரு டெஸ்ட் எடுத்துக்கிடுங்க,என்ன.சாஎங்காலம் வந்து பாருங்க.பத்து ரூவா குடுங்க' ன்னு சொல்லிட்டு 'டேய் தாசு, மத்தவன் இன்னிக்கி சுயீந்தரம் போறானாம் கேட்டியா' என்று தன் வழக்கமான பணிகளை பார்க்கப்போய்விட்டார்
சாயங்காலம் போனால் அதே வயிறு அமுக்கல் டெஸ்ட், பூரிமசாலாவை வெங்காய பஜ்ஜி இடமாற்றம் செய்திருந்தது.'ஒங்களுக்கு மஞ்சநோவு இருக்கு, மருந்து எளுதிருக்கேன்.ஒரு வாரம்களிச்சு வந்து பாருங்க, என்ன' என்று அனுப்பி வைத்தார்
ஒரு வாரம் கழித்து போனால் அதே ரத்த பரிசோதனை. குத்தால தாஸ் என்னையும் அந்த பேப்பரையும் மாறி மாறி பார்த்தார்.
'ஒங்களுக்கு மஞ்சநோவாக்கும் வந்திருக்கு.மருந்து சாப்பிட்டாச்சின்னாக்கும் சொன்னீய. இப்பம் டெஸ்ட் எடுத்ததில செரியாகல்ல.நான் இனி என்னெய்யதுக்கு' என்றார்
ஆனந்தனுக்கு கண்களில் நீர்முட்டியது. எனக்கு பயங்கர பசி.
ஆனந்தன் 'கவலைப்படாதேடா, நாகர்கோவில்ல கண்ணன் லேப்ல போய் செக் பண்ணுவோம், இவரு முழியே சரியில்ல' ன்னான்
அங்க டெஸ்ட் பண்ணி பார்த்ததில் all OK சொல்லிவிட்டார்கள். ஆனந்தன் என்னை கட்டி பிடித்து கொண்டு 'நான் சொன்னேனே பாத்தியாடா, பத்தியத்த விட்டு தள்ளு, ஓட்டல்ல போய் நன்னா சாப்டுட்டு ஆத்துக்கு போவோம்'னான்
அன்றோடு நான் தாஸுக்கு   'பை' சொல்லிவிட்டேன்
ஆனந்தன் போல அன்பான அண்ணனை தந்த அந்த இறைவனுக்கு என் நன்றி
டாக்டர் தாஸை அறிந்தவர்கள் வருத்த பட வேண்டாம் .அவர் மீது எனக்கு மிகுந்த அபிமானமுண்டு 

அப்பா

அப்பா....

காலையில் இரண்டரை  மணிக்கு போன் அடிக்கிறது என்றால் அப்பாவுடையது என்று அர்த்தம். அவருக்கு காலை  ஐந்து மணி என்றால் தோஹாவில் காலை இரண்டரை மணி. வந்த புதிதில் அப்பாவிடம் சொல்லிப் பார்த்தேன். அவருக்கு இந்த கிரீன்விச் MEANTIME  இல் எல்லாம் நம்பிக்கை இல்லை. 'என்னடா இன்னம் தூங்கறாய்' என்பார். அவரை பொறுத்தவரை எல்லா ஜீவா ராசிகளும் காலை 5 மணிக்கு எந்திரிந்து அண்டாவில் வெந்நீர் போட வேண்டும் என்று எதிர்பார்ப்பு.
அப்பா வேகமாக பேசுவார். அவருக்கு அது தெரிந்ததாலோ என்னமோ எல்லாத்தையும் மூணு தடவை சொல்லுவார். அப்பாவின் நண்பர் மிக மரியாதையானவர். அப்பாவை பார்க்க வந்திருந்தார். அப்பா அவரிடம் 'அப்பிந்தச்சா' என்று மூணு தடவை கேட்டார்  [அப்பவே வந்து விட்டீர்களா என்பது தமிழாக்கம்]. நண்பர் மரியாதை நிமித்தமாக திரும்ப கேட்க விரும்பவில்லை. எனவே
 'அப்பளம் நேத்திக்கிதான் வாங்கினேன். சிவக்காம நன்னா பொரியறது' என்று ஒரு போடு போட்டார்.
காலையில் போனில் 'ஆயன் கிணத்தில் ரவை கொண்டு போன வண்டி மறிஞ்சு விட்டது, எல்லாரும் ரவையை கொண்டு போயிட்டா, ரங்கா மாமி மூக்குத்தியை காணலை , முருகன்  நாளைக்கி பைல்ஸ்   ஆப்பரேஷன் பண்ணிக்கறான், ரமேஷ் ஆத்தில பசு கன்னு போட்டாச்சு' என்று தகவல்களை அடுக்குவார். இதை காலை ரெண்டரை மணிக்கு தோஹால  நான் கேட்டு என்ன செய்ய போரேன் என்பது அவர்  கவலை அல்ல.
அப்பா அது தவிர பல தகவல்களை கேப்பார். இடை இடையே 'தூங்கரையடா'  என்பார். உனக்கு எவ்வளவு  செலவு ஆகிறது என்பார். நான் அவருக்கு ஆறாயிரம் செலவாகிறது என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். எனவே 'பன்னெண்டு ஆயிரம் ஆரதுப்பா' என்று பொய் சொல்வேன். 'ஏண்டா, நாங்க ரெண்டு பேர். நீங்க மூணு பேர். ஏன் அவ்வளவு ஆறது?' என்பார். அவருக்கு உலக பொருளாதாரத்தில்
நம்பிக்கை இல்லை-எனவே தோஹா புலியூர்குறிச்சி ஒரேவிலை வாசியில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பார்.
அப்பாவுக்கு மூன்று விஷயங்கள் அலர்ஜி. போர்ட்டர், ஹோட்டல், சினிமா. அவர் மட்டும் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் இந்த மூன்றையும்  உபயோகிக்கிறவர்களை 'வன் கொடுமை' சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளி இருப்பார்.
அப்பா எப்போதும் டவுன் பஸ்ஸில் கூட்டிகொன்டு போவார் [2009 வரை]. பல விஷயங்களை சொல்லி கொண்டு வருவார். அவர் வாழ்க்கையில் கஷ்டப்பட்டது, அம்மாவை அவர் இப்போது எப்படி பார்த்து கொள்கிறார் [அவருக்கு நான் அம்மாவை சரியாக பார்த்துக்கொள்வதில்லை என்று நினைப்பதாக ஒரு கருத்து]. சில சமயம் அம்மாவை புகழ்வார் [என்னை மகிழ்ச்சியாக்க]. 'உனக்கு டவுன் பஸ் பிடிக்காதோ' என்று கேட்பார், எதோ  நான் சிறு வயது முதல் AC காரில் தான் போன மாதிரி. சீட் கிடைத்ததும் என்னை உக்கார சொல்லி தான் நின்று கொண்டு வருவார். உக்கார சொன்னால் கோபபடுவார்.
சில சமயம் எனக்கு வரவு செலவு கணக்கெல்லாம் காட்டுவார். எதுக்கப்பா
 என்றால் சும்மா தாண்டா, நாளைக்கி உனக்கு ஈஸியா இருக்கும் என்பார்.
ஒரு தடவை போஸ்ட் மேன் மேல் பெட்டிஷன் போட்டேன் என்றார். அவன் ரொம்ப டிலே பன்றான் என்றார். எப்படிப்பா தெரியும்னா, நானே எனக்கு நாகர்கோவில்ல போயி லெட்டர் போட்டேன். அங்க டெஸ்பாட்ச் பண்ணி ஆச்சு. இவன் தான் ஹோல்டு பண்ணறான் என்று விளக்கமளித்தார். அப்பா ஒரு வில்லங்கமான ஆள்.
ஒரு தடவை அப்பாவும் அம்மாவும் பயங்கர சண்டை. என்னன்னு பார்த்த அம்மா ட்ரமுக்கு [drum) உள்ள எதோ குனிந்து பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறாள். எதேச்சையாக அங்கு வந்த அப்பா அவள் தலைக்கு மேல் தன் தலையை வைத்துப் பார்க்க, அது தெரியாத அம்மா சடாரென நிமிர, அப்பாக்கு சரியான அடி மூக்கிலே. அம்மாக்கு பின் மண்டையில. கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தினேன்.
அப்பாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். ஒரு தடவை காலையில் ரெண்டரை மணிக்கை போன் அடித்தது. பழக்க தோஷத்தில் 'சொல்லுங்கப்பா' என்றேன் தூக்க கலக்கத்தில். அங்க இருந்து 'என்னப்பா இது புது ஸ்டைல் , என்றான் என் மகன். அப்போது அப்பாவின் கால் இனிமே வரவே வராதே என்று மனம் ரொம்ப வலித்தது.
அப்பா வாழ்க்கையில்  நிறைய கஷ்டம் தான் பட்டு இருக்கிறார். தன் தந்தை அன்பை அனுபவித்தது இல்லை. நான் எவ்வளவோ சொல்லியும் வாழ்க்கையின் சுகங்களை அனுபவிக்க மறுத்துவிட்ட மாமனிதர்.
Physical closeness  விரும்பாத மனிதர். 2004ல் ஒரு நாள் அவரை கட்டி பிடித்து  கொண்டு விட்டேன். என்னடா என்று surprise  ஆகி விட்டாலும் என் மகன் 'அப்பா உங்களை கட்டிக்கணும்
  நினைக்கிறார் தாத்தா' என்றதும் ஓகே சொன்னார்.  அதற்கு அப்புறம் அடிக்கடி அப்பாவை அணைத்து கொள்வேன். நீங்கள்  ரொம்ப precious  அப்பா என்பேன். போறும்டா என்பார்.
அடுத்த பிறவியில் என் மகனாக பிறந்து, தந்தை அன்பை அனுபவிக்கவும், வாழ்க்கையை அனுபவிக்கவும், இன்னும் சற்று க்ளோஸ் ஆக பழகவும், சற்று தாராளமா செலவழிக்கவும் , வாய்ப்பு கொடு இறைவா என்று கண்கள் பனிக்க அந்த சர்வேஸ்வரனை வேண்டி கொள்கிறேன். அப்பாவை நினைக்கும் போதேல்லாம் ஒரு தாய்மை உணர்வு என்னில் மட்டற்று சுரக்கிறது.
 என் மகனை அணைத்துக்கொள்ளும் போதெல்லாம் நான் சற்று நினைவு இழந்தால்  'என்ன தாத்தா நினைப்பா' என்று கேட்பான்.
அப்பாவின் மறைவு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஒரு நல்ல தந்தையை தந்த இறைவனுக்கு என் நன்றி.

ஹரி மாமா

சந்திரசேகரன் மாமா ஒரு வித்தியாசமான மனிதர். சிறிய வயதிலேயே இஞ்சினியரிங் முடித்து உயர்ந்த பதவி வகித்து 50 வயதிலேயே ரிட்டயர்டு ஆகி சொந்த ஊரில் செட்டிலாகி விட்டவர் வாசலில் வெத்தலை செல்லத்தோடு தும்பை வைள்ளை நிற வேட்டியும் மேற்சட்டையும் அணிந்திருப்பார்.அவரை கண்டால் தெருவில் போகிறார்கள், மிரண்டு ஓடுவார்கள். அவரது அகராதியில் அச்சம் என்பதே கிடையாது. நான் வாழ்க்கையில் சந்தித்த அதிபுத்திசாலிகளில் மாமா தலையானவர். என் அப்பாவை அவர்தான் படிக்க வைத்தார். என் அப்பா எங்களிடம் சந்திரசேகரன்மாமாவை பற்றி அடிக்கடி சொல்லுவார். உங்கள் வாழ்க்கை அவரிட்ட பிச்சைடா என்பார் அப்பா. நான் கோவிலுக்கு போகும் வழியில் மாமா வீட்டிற்கு தினமும் செல்வேன். மாமா இரண்டொரு வார்த்தைகள் பேசுவார்கள். வா என்பார்கள் சில சமயம் எங்கள் வயது பையன்களுக்கிடையிலான சண்டைகளை பற்றி விசாரிப்பாரகள். மாமா வீட்டில் ஒரு பெரிய ஊஞ்சல் இருந்தது. மாமா அதில் அமராத நேரம் நான் ஒரு அரை மணி நேரம் ஊஞ்சலாடிவிட்டு வருவேன். மாமி தங்கமானவர். எப்போதும் 'தாயினும் சாலப்பரிந்து' ஏதாவது உண்ணத்தருவார். நானும் மேற்போக்காக மறுத்து விட்டு சாப்பிடுவேன்.மாமா வீட்டில் எப்போதும் ஒரு சுகந்தமான மணம் வீசும். அவர்கள் வீட்டின் பின்புறத்தில் ஒரு நாகலிங்கப்பூ மரம் இருந்தது. அது தவிர சில பசுக்களும். மாமா சில சமயம் சாமவேதம் ஓதுவார்கள். நான் 1985ல் வரை சந்தித்த போது ஒரு பொதுவழ்க்கை பற்றி கூறி அதில் ஏன் இ.பிகோ AAA சட்டத்தை அரசாங்கம் கையிலெடுக்க கூடாது என்றார்கள். மாமா நன்கு ஜாதகம் மற்றும் கைரேகை பார்ப்பார். என்னிடம் உனக்கு 51 வது வயதில் வேலையில் கண்டம் இருக்கிறது என்றார். ஒரு சமயம் எனது தாத்தா நாரயணய்யர் வார்டு தேர்தலுக்கு மாமாவை எதிர்த்தது தவறு என்று விளக்கினார். நான் நீங்கள் செய்ததே சரி என்றேன். மாமாவின் வீட்டு சக்கை வரட்டி போன்ற தின்பண்டத்தை நான் எங்கும் ருசித்ததில்லை. மாமாவிடம் அச்சப்பட்டாலும் எத்தனையோ செய்திகளை அவர் சொல்ல கேட்டு இருக்கிறேன். மாமா ஒரு மகத்தான மனிதர். அவர் வாழ்ந்த காலத்தில் சராசரி மனிதர்களை விட அறிவிலும் அனுபவத்திலும் பல மடங்கு உயர்ந்தவர் எப்போது மாமாவை நினைத்தாலும் கண்கள் பனிக்கிறது.அந்த வீட்டின் விசேஷ மணம் என் வாழ்க்கையில் மறக்க இயலாத ஒன்று.
⁠⁠⁠⁠7:59 AM⁠⁠⁠⁠⁠